மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் தைத் திருநாளை முன்னிட்டு நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டை காண்பதற்காக பல்வேறு மாவட்ட, மாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை காண்பதற்காக முன்னதாக திமுக இளைஞரணிச் செயலாளார் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் வந்தடைந்தனர்.
மேலும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்களை விரட்டியடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோதிரங்களை உதயநிதி வழங்கினார். பின், அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண்பதற்கு வருவதாகக் கூறிய ராகுல் காந்தி, ஜல்லிக்கட்டு நடைபெறும் திடலுக்கு வந்தடைந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களுடன் அமர்ந்து ராகுல் காந்தி ஜல்லிக்கட்டை கண்டுகளித்தார்.
இதற்கிடையே ராகுல் காந்தி அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அவரை வரவேற்று, ராகுலின் அருகாமையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ஆர்வமோடு ரசித்தார்.
பின்னர் சிறிதுநேரத்தில் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்தி வரும் கமிட்டியினரையும், மாடுபிடி வீரர்களையும், பிடிபடாத காளைகளையும் பாராட்டிவிட்டு ராகுல் காந்தியும், உதயநிதி ஸ்டாலினும் அடுத்தடுத்து விடைபெற்றனர்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... பாயும் காளைகள்: துணிந்து அடக்கும் வீரர்கள்!