தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடத்தில் இடம் ஒதுக்கக்கோரி ஒத்தக்கடையைச் சேர்ந்த தீப்சிதா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ,"தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ இடங்களுக்காக நடத்தப்பட்ட இரு கட்ட மருத்துவக் கலந்தாய்வு முடிந்துள்ளது. இந்த கலந்தாய்வு முடிந்த பிறகும் தமிழகத்தில் 115 அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த 115 மருத்துவ இடங்களை மத்திய அரசு, தமிழக அரசிடம் 26.7.2019-ல் வழங்கியுள்ளது. மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுடன் சேர்த்து கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்புவதற்காக அந்த சீட்டுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. மனுதாரர் நீட் தேர்வில் 335 மதிப்பெண் பெற்றுள்ளார். மத்திய அரசு ஆன்லைன் வழியாக நடத்திய இரு கட்ட கலந்தாய்விலும் மனுதாரருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் 115 சீட்கள் திரும்ப வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு முன்பு 2019-2020ஆம் கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் விண்ணப்பித்த கடைசி தகுதியான நபர் வரை சீட் வழங்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் நீதிமன்றத்துக்கு ஏற்படுகிறது. இதனால் அகில இந்திய மருத்துவ சீட்டுகளுக்கான கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை ஆகஸ்ட் 2-ல் தாக்கல் செய்ய வேண்டும், இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.