மதுரை: மதுரை திருநகர் பகுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கதிரவன் (திமுக ஆதரவாளர்) செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இதில், பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் முருகன் ஜியும் (அதிமுக ஆதரவாளர்) பங்கெடுத்தார்.
அப்போது, பேசிய பி.வி. கதிரவன், மதுரையில் உள்ள திருநகர் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற 2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதுவரை நினைவு இல்லம் அமைக்க முட்டுக்கட்டை போடும் இந்திராகாந்தி நினைவு மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து வருகிற 9ஆம் தேதி பள்ளி முன்பு ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.
மேலும், வருகிற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தவுடன் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை ஸ்டாலின் சூட்டுவார் எனவும், அதிமுக, பாஜக கூட்டணி தற்போதுவரை அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதனால், ஆவேசமடைத்த அதிமுக ஆதரவாளரான முருகன் ஜி, கதிரவனின் பேச்சை இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து முருகன் ஜி பேசும்போது, பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவின்போது திருநீறை கீழே கொட்டி முத்துராமலிங்கத் தேவரை அவமதித்தவர் ஸ்டாலின். இன்றைக்குக்கூட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உணவிற்கு கஷ்டப்படும் காலத்தில் தனது தாத்தா உதவி செய்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்று கூறினார்.
இதில், வாக்குவாதம் முற்றி இருதரப்பினருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. அப்போது முருகன் ஜி ஆவேசமடைந்து கதிரவனின் ஆதரவாளர் ஒருவரின் சட்டையைப் பிடித்து அடிக்க முற்பட்டார்.
தொடர்ந்து அங்கிருந்த கதிரவன் செய்தியாளர்கள் சந்திப்பை விடுத்து பாதியிலே சென்றார். தொடர்ந்து ஆவேசத்துடன் உரத்த குரலில், தேவரின் திருநீறை அவமதித்த ஸ்டாலினின் கொடும்பாவி எரிக்கப்படும் என்றும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வசைபாடிக்கொண்டும் முருகன் ஜி இருந்தார். தொடர்ந்து அங்கு திருநகர் காவல் துறையினர் வந்ததும் கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
பிடிஆர் பழனிவேல் ராஜன், தேவர் குறித்து அப்படி ஒரு பதிவே போடவில்லை என்றும், இந்த சமய நெறியாளர் என்ற பேஸ்புக் கணக்கில் எனது பெயரைப் பயன்படுத்தி போலியாக செய்தி பரப்பப்பட்டுள்ளது என்றும் தற்போது விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி: நீதிபதியின் கருத்து உள்நோக்கம் கொண்டது -முருகன் ஜி