புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வர்த்தக வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயராமன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில், மணல்மேல்குடியில் சுமார் 5000 பேர் வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ள பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் ஞாயிறு கிழமைகளில் வார சந்தை நடக்கும், மணல்மேல்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்த பொருள்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், மணல்மேல்குடி பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை நடக்கும் இடத்தில் அதிமுக சார்பில் வரும் செப்டம்பர் 22 ம் தேதி ஞாயிறு கிழமை அன்று அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்த முடிவு செய்து போஸ்டர் ஒட்டப்பட்டு, துண்டு பிரசுரம் கொடுத்து வருகிறார்கள். வாரச் சந்தை நடக்கும் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டால், விவசாயிகள், சிறு வியாபாரிகளின் ஒரு வார வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி காவல் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல் துறையினர் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே, செப்டம்பர் 22ஆம் தேதி ஞாயிறு கிழமை அன்று நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் தான் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அதனால், பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் இருக்காது என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பேருந்து நிலைய வளாகத்திலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க : நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: உதித் சூர்யா முன் ஜாமீன் கோரி மனு