கரோனா வைரஸ் தொற்றின் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் தன்னார்வலர்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்துவந்தனர்.
தற்போது சில தளர்வுகளுடன் தொழில்சாலைகள், கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பதையடுத்து, மதுரையில் உள்ள டெம்பிள் சிட்டி என்ற தனியார் உணவகம் பார்சல் வாங்கவரும் பொதுமக்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் ரசத்திற்கு பதிலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூலிகைகள் கலந்த ரசத்தினை வழங்கிவருகிறது.
இதுகுறித்து டெம்பிள் சிட்டி நிறுவனர் குமார் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை புரிந்துவருகிறோம். வெளிமாவட்டங்களில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு மட்டுமன்றி கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். மதுரை பூங்கா முருகன் கோவில் அருகேயுள்ள சஷ்டி மண்டபம், காக்கைப்பாடினியார் மேல்நிலைப்பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு காலை, மாலை என இரு வேளைகளில் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கிவருகிறோம் என்றார்.
தற்போது அடுத்தகட்டமாக, உணவகத்திற்கு பார்சல் வாங்க வருபவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில், தூதுவளை, ஆடாதொடை, துளசி, வால் மிளகு ஆகியவை கலந்த மூலிகை ரசத்தை வழங்கிவருகிறோம் என்றார்.
இதையும் படிங்க: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ’மூலிகைத் தேநீர்’ பரிந்துரைத்த மத்திய அரசு!