இந்திய சிறைகளின் 2019ஆம் ஆண்டு நிலவரம் குறித்த புள்ளிவிவரம் ஒன்றை உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சிறைகளின் நிலவரம் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது தமிழ்நாடு சிறைகளில் 14 ஆயிரத்து 707 பேர் உள்ளனர். இவர்களில் 77 நபர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்தப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனரும், ஆர்டிஐ ஆர்வலருமான ஹக்கீமிடம் பேசினோம். தற்போது சிறையில் இருக்கிற கைதிகளில் 200 பேர் முதுநிலை பட்டதாரிகள் ஆக உள்ளதாகத் தெரிவித்த அவர், ஆயிரத்து 300 கைதிகள் இளநிலை பட்டதாரிகள் என்றும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயின்றவர்கள் ஏறக்குறைய 700 பேர் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இவர்கள் தாங்கள் பெற்றுள்ள கல்வி அறிவோடு சிறைப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் பலர் சிறைச்சாலையில் இருந்தவாறே கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். அதைப்போன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்த கைதிகளும் சிறைகளில் உள்ளனர் என்கிறார் ஹக்கீம்.
இதில் சுவாரஸ்சியம் என்னெவென்றால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் ஆக உள்ள கைதிகளே பிற கைதிகளுக்கு பாடம் நடத்தக் கூடிய ஆசிரியர்களாய் உருவாக்கியுள்ளனர். இது சிறைச் சாலைகள் அனைத்தும் அறச்சாலைகளாக மாறும் என்பதற்கு சான்று என ஹக்கீம் பெருமிதம் பொங்கக் கூறுகிறார்.
கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை
தற்போது சிறையில் உள்ள நபர்களில் 13 ஆயிரத்து 964 பேர் ஆண்கள், 743 பேர் பெண்கள். சிறையில் உள்ள மொத்த நபர்களில் 195 பேர் முதுநிலை பட்டதாரிகள், ஆயிரத்து 278 பேர் பட்டதாரிகள், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி அறிவு பெற்றவர்கள் 640 பேர், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றவர்கள் 2,955 பேர், பத்தாம் வகுப்புக்கு கீழே படித்தவர்கள் 5 ஆயிரத்து 286 பேர், கல்வியறிவற்றோர் நான்காயிரத்து 353 பேர்.
தொடர்ந்து பேசிய ஹக்கீம், ”சிறைச்சாலையில் கல்வி பெறுகின்ற ஒரு நபர் சமூகத்தின் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் கூடுதல் புரிதலோடு வெளியே வருகிறார். அதற்குரிய வாய்ப்பை தமிழ்நாடு சிறைத்துறையும் அரசும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதே போன்று சிறைக்கைதிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் மாநிலங்களில் தெலங்கானா ரூபாய் 599.99 கோடியும், தமிழ்நாடு ரூபாய் 72.96 கோடியும் ஈட்டி தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளன. தமிழ்நாடு சிறைகளில் உள்ள கைதிகளின் தொழில்நுட்ப அறிவை சிறைத்துறை பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி தமிழ்நாடு சிறைகளில் உள்ள நபர்களில் 77 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறுக்கமான சூழலில் உள்ள அந்த கைதிக்கு வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தும் விதமாக கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கினால் மனநோய்க்கு இடம் இருக்க வாய்ப்பில்லை. சிறையிலுள்ள அனைவரும் வெளியே வரும்போது சிறந்த கல்விமான்கள் ஆக வர வேண்டும்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் கூறியதை போல ஒவ்வொரு சிறைச்சாலையும் அறச்சாலையாக மாற வேண்டும். காந்தியடிகளின் இந்த கனவை தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்கிறார்.
குற்றம் புரிந்தவர்களும் மனிதர்கள்தான். எந்த ஒரு மனிதனும் தெரிந்தே குற்றத்தில் விழுவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அவற்றைத் தீர்மானிக்கின்றன. குற்றவாளிகள் திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்கின்ற சூழல் நமது சிறைச்சாலைகளில் உருவாக்கப்பட வேண்டும் அப்போதுதான் காந்தியம் வென்றதாக பொருள் கொள்ள முடியும்.
இதையும் படிங்க:கைதிகளை வைத்து அசத்தும் கேரள சிறைச்சாலை!