பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதள ஊடகத்திடம் பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "நவீனமான காலகட்டத்திலும் பெண் சிசுக் கொலை நடைபெறுவது பற்றி இந்திய காவல் பணி அலுவலராக குறிப்பாக மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக மிகுந்த வேதனைப்படுகிறேன். பெண் சிசுக் கொலையை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டேன். நேரடியான ஆய்வு தலைப்பு இல்லை என்றாலும் இதில் எனக்கு ஆர்வம் இருந்தது.
இதற்கு காரணமாக பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. ஆனால் அதை நான் முற்றிலும் மறுக்கிறேன். பெண்களை அதிகாரமயப்படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகள் ஆதிகாலத்திலிருந்தே இருந்து வருகின்றன. ஆகையால் அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இன்றைக்கு எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மிகப்பெரிய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. விசாகா குழுவின் பரிந்துரைகள் அளித்தும் கூட பெண்களுக்கு முழு பாதுகாப்பு இன்னும் கிட்டவில்லை" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1091 என்ற எண் பெண்களுக்காகவும் 1098 என்ற எண் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர மதுரையில் சேவ் மதுரை (Save Madurai) என்ற பெயரில் புதிய செயலி ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பெண்கள் சமூக வலைதளங்களில் கவனமா இருங்க' - ஏடிஜிபி ரவி