மதுரை: விருதுநகர் மாவட்டம், நரிக்குடியைச் சேர்ந்த மருது பாண்டியர்களின் வாரிசான மங்கை மணிவிழி நாச்சியார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர்கள், மருதுபாண்டிய சகோதரர்கள்.
இவர்களுடைய குருபூஜை அக்டோபர் 24ஆம் தேதி வருடந்தோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில் மருது பாண்டியர்களின் வாரிசுகளான 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்கு உள்ள மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கும் அக்டோபர் 27ஆம் தேதி குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது.
மருது பாண்டியர்கள் குரு பூஜை
அப்போது மாவட்ட நிர்வாகம் அங்குள்ள பள்ளிக்கு விடுமுறை தந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக சில பிரச்னைகளின் காரணமாக நீதிமன்றம் அனுமதி பெற்று விழா நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் இந்த ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மனநலம் பாதித்தவர்களில் தடுப்புசி செலுத்தியவர்கள் எத்தனை பேர் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு