மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் பென்னமராவதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாய் - மகன் மர்மமான நிலையில் கொலை செய்யப்பட்டனர். மேலும் அவர்களது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த சம்பவம் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிப்பதற்காக நடந்ததா? அல்லது முன் விரோதம், தொழில் போட்டி போன்ற வேறு காரணங்களால் நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, வீட்டின் மாடியில் குடியிருந்த வள்ளி மயில் என்பவரை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். மேலும் தற்போது அவருக்கு உன்மை கண்டறியும் மேற்கொள்ள ஆயுத்தமாகியுள்ளனர். இந்நிலையில், வள்ளி மயில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிகப்பி இவரது மகன் பழனியப்பன் இருவரும் வீட்டிலிருந்த போது கொலை செய்யப்பட்டனர். வீட்டிலிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை, கொள்ளை சம்பம் நடந்த வீட்டின் மாடியில் வள்ளி மயில் ஆகிய நான் வாடகைக்கு வசித்து வந்தேன். எனவே, இந்த கொலை, கொள்ளை சம்பவம் நடந்த 2ஆம் நாளிலிருந்து பொன்னமராவதி போலீசார், என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கொலை, கொள்ளை வழக்கில் என்னைக் குற்றவாளியாக ஆக்குவதற்காக உண்மை கண்டறியும் சோதனையை செய்யப் போவதாக தெரிகிறது.
நான் மேற்கூறிய சோதனைக்கு எந்த சூழ்நிலையிலும் ஒத்துக் கொள்ளவில்லை. காவல்துறையினர் தயார் செய்து வைத்திருந்த அச்சடித்த காகிதத்தில் என்னுடைய கையெழுத்தை பெற்றுக் கொண்டு உண்மை கண்டறியும் சோதனை செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது. இது எனக்கு மிகப் பெரிய அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் என்னைச் சம்பந்தப்படுத்துவதில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனால் என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் வேறு வகையான தொந்தரவுகளையும் செய்யக் கூடாது என பொன்னமராவதி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இதேபோல் வள்ளி மயிலின் சகோதரர்கள் வள்ளியப்பன், சின்னு ஆகியோரும் தங்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த கூடாது என மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கைப் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: போரூர் ஏரியில் இளைஞர் சடலம்.. காதல் மோசடி வழக்கில் தேடப்பட்ட நிஷாந்த் என தகவல்!