தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு தேர்வில் 196 பேர் முறைகேட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனால், தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட 196 பேரும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டது.
தேர்வு ரத்து செய்யப்பட்டதையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்ற தகுதியானவர்களை நியமிக்கக் கோரியும், பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில், தேர்வு ரத்து செய்யப்பட்டது சரி என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து தேர்வில் கலந்து கொண்ட பலர் முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், “தேர்வில் முறைகேடு நடந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்ற யாருக்காகவும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால், இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆர்எஸ் பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி!