விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதற்கான காரணத்தை யார் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் இதுவரையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. இவ்வாறான தற்கொலைகள் நடப்பது இது முதல்முறை அல்ல.
சென்னையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உயர் கல்வி மாணவர்களுக்கு இப்படியான மன உளைச்சல் ஏற்பட்டு, அவர்கள் தற்கொலை செய்வது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும். உயர் கல்வியில் மாணவ மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகள் ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்வதற்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். மேலும் பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் சுதர்சனிடம் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துவது, உள்நோக்கம் கொண்டதாகவும் அரசியல் தலையீடு இருப்பதாகவும் தெரிகிறது. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்ற பாத்திமாவின் பெற்றோர் நம்பிக்கையை, அவர்களுடைய மகளின் இறப்பு இழக்கச் செய்துள்ளது. இதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெட்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
சபரிமலை விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் அது குறித்து பேசக் கூடாது. பெண்கள் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். சபரிமலை பிரச்சனையின்போது, வழிபாடுக்கு சென்ற பெண்களுக்கு சிறப்பான பாதுகாப்பை கேரள அரசு அளித்தது. அதேபோல, தற்போது முன்பதிவு செய்துள்ள பெண்களுக்கும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ’பி.எஸ். கிருஷ்ணனின் மறைவு பட்டியிலின மக்களுக்கு பேரிழப்பு’ - திருமாவளவன்