தேனி மாவட்டம் வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்பாண்டி. இவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்துவந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக இவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கானது நேற்று முன்தினம் (டிச.15) விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றம் இவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து பெருமாள்பாண்டி பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில் இன்று (டிச.17) மதுரை தத்தனேரி ஈஎஸ்ஐ மருத்துவமனை அருகேயுள்ள அவரது வீட்டில் பெருமாள்பாண்டி, மனைவி உமா மீனாட்சி ஆகியோர் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த செல்லூர் காவல் துறையினர் இருவரின் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் சம்பவத்தன்று பெருமாள்பாண்டி, அவரது மனைவி உமா மீனாட்சி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பெருமாள்பாண்டி தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களது உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூரை கலங்கடித்த 'பிரியாணி' கொலை!