மதுரை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் நேரடி நியமன வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கவிழா இன்று (மார்ச் 28) நாகமலை புதுக்கோட்டை பில்லர் மையத்தில் நடைபெற்றது. இதில் தென்மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் 95க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதற்கட்டமாக நிர்வாகத் திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,"வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை பள்ளிக் கல்வித்துறை பெற்றுத் தந்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து பேசினோம். நீட் விலக்கு குறித்த சட்டப்பேரவை தீர்மானத்தை டெல்லிக்கு அனுப்புவதாக கூறி உள்ளார். விரைவில் முதலமைச்சர் குடியரசு தலைவரை சந்தித்து பேசுவார். அதன் மூலம் நீட் தேர்வுக்கு நல்லதொரு முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.
விளம்பரம் தேடும் அண்ணாமலை : பள்ளி மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு 1.80 லட்சம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் குறித்து இதன் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வாயிலாக பள்ளி மாணவியருக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 18 வயது உள்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்தில் பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் பயனடைவார்கள். ஆனால், மாணவர்கள் ஸ்டைலாக செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்து படியில் தொங்கிய படி பயணம் செய்கின்றனர். அவ்வாறு பயணம் மேற்கொள்ளக் கூடாது.
முதலமைச்சரை விமர்சனம் செய்து அண்ணாமலை விளம்பரம் தேடுகிறார். பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ.7500 கோடி நிதி ஒதுக்கி பேராசிரியர் அன்பழகன் பெயரில் பணிகளைத் தொடங்கி உள்ளோம். அதன் மூலம் பள்ளி கட்டடங்கள் சரி செய்யப்படும்" என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'நான் கேட்காமலேயே சிறந்த துறையை முதலமைச்சர் வழங்கியுள்ளார்' - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்