மதுரை: ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளருமான ஏ.கே மூர்த்தி சிறப்புரை ஆற்றினார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி, அதிகமான நகர ஒன்றிய பேரூர் மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் செவிலியர்களை நியமித்து நோயாளிகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே மூர்த்தி பேசியதாவது, "பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உத்தரவின்படி, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் மக்களை நேரடியாக சென்று கட்சியின் செயல்பாடுகள் கொள்கைகளை எடுத்து கூறி நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்ற வேண்டும்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை, பாதாள சாக்கடைகள் சுத்தமின்றி இருப்பதை போர்க்கால நடவடிக்கையில், தமிழக அரசு சார்பில் துறை சார்ந்த அமைச்சர் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக தொழில் நிறுவனங்கள் மதுரையில் அமைந்திட துறை சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நீர்நிலைகள் பேணிக்காத்து மேம்படுத்த வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். டெங்கு காய்ச்சல் காரணமாக தமிழகம் முழுவதும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு வீடு வீடாக சென்று பொதுமக்கள் நலன் பேணுதல் வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் கட்சியின் அனைத்து மட்ட தொண்டர்களிடமும் ஆலோசித்து தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் முடிவை அறிவிப்பார். டெல்டா மாவட்டங்கள் பாதுகாப்புக்கு அனைத்து கட்சிகளை கூட்டி பிரதமரிடமும், கர்நாடக முதலமைச்சரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி காவேரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பாமகவை ஆட்சியில் அமர்த்திய பின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் சவுக்கால் அடித்து கேள்வி கேட்கலாம். ஆனால் மற்றவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? இல்லையா!.. என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. தொடர்ந்து அன்றாட மக்கள் பிரச்சனையை கண்டித்து குரல் கொடுத்து கொண்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான்.
தமிழ்நாடு முதலமைச்சர் நினைத்தால் அனைத்து கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளை அழைத்து கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம். கர்நாடக அரசை போன்று காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் போராட்டங்கள் அறிவிக்கலாம்" என்று தெரிவித்தார்.