வருகிற மே 25ஆம் தேதி இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடங்கி இன்று வரை அனைத்து வணிக நிறுவனங்களும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தற்போது ஊரடங்கு விதிகளில் சிறு, சிறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட கால நேரத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. அரசு மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் தினம்தோறும் நோன்பு வைப்பது, ஐந்து நேரத் தொழுகைகள், சிறப்புத் தொழுகைகள் என அனைத்து பிரார்த்தனைகளையும், தற்போதைய சூழல் கருதி வீட்டிலேயே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற மே 25ஆம் தேதி திங்கட்கிழமை நோன்பு நிறைவு நாளான ரம்ஜான் பெருநாள் அன்று சிறப்புத் தொழுகையில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்தத் தொழுகையை இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் அல்லது திறந்த மைதானங்களில் ஒன்றுகூடி தொழ வேண்டும் என்பது அவர்களின் மதக் கடமையாகும். இந்த சிறப்புத் தொழுகை மதுரையில் மகபூப்பாளையம், தமுக்கம் மைதானங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
அந்த வகையில், ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த, வருகிற மே 25ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசம் வழங்க, அரசிடம் வேண்டுகோள் வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மே 25ஆம் தேதி மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம், இஸ்லாமியர்களின் முக்கியக் கடமையான ரம்ஜான் பெருநாள் தொழுகைக்கு, அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பி. என் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க : 'அன்று வெள்ளம், இன்று கரோனா'- 112 ஆண்டுக்கு பின் ரம்ஜான் பாதிப்பு!