மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்தான் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் போதை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இப்புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படையினர் மதுரை வண்டியூர் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த சிறுவனைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அச்சிறுவன் அதே பகுதியில் இருக்கக்கூடிய மருந்தகத்தில் வாங்கியதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் மருந்தகத்தில் சோதனை செய்தபோது, சட்டத்திற்குப் புறம்பாக மருந்தகத்தில் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. மருந்தகத்தின் உரிமையாளர் ராஜாமுகமது என்பவரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து சுமார் 250 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.