திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விவசாய சங்க நிர்வாகி கிருஷ்ணசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "சுமார் 81.08 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள பரப்பலாறு அணை சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக 63 குளங்களும் பாசன வசதி பெற்று நஞ்சை நிலங்களாகத் தீர்வை செலுத்தி வந்த உள்ளது.
அரசு அணைக்கட்டி தருவதாகக் கூறி அணையைக் கட்டி தண்ணீரை ஒட்டன்சத்திரம் குடி நீருக்காகத் தேக்கி வைத்துக் கொண்டு பாசன நிலங்களுக்கு விட மறுக்கின்றனர். 10 ஆண்டுகளாக மழை குறைவால் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்குக் கீழே உள்ளது.
பரப்பலாறு அணை நீரைத் தவிர வேறு எங்கிருந்தும் தண்ணீர் வரத்து இல்லை. நகரத்திற்குக் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
நாங்கள் ஆயிரங்கணக்கான குடும்பங்கள் வயல் அருகே வசிக்கிறோம். விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, முக்கியமான தொழில் கரவை மாடுகள்தான். மனிதனுக்கே தண்ணீர் இல்லையென்றால் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டி நிலை உள்ளது. எனவே குளங்களுக்குக் கொடுக்கவேண்டிய தண்ணீரை அணையிலிருந்து விடுவிக்கவேண்டும்.
பரப்பலாறு அணையிலிருந்து, முத்துபூபால சமுத்திரம், பெருமாள்குளம், ஜவ்வாது பட்டி, பெரியகுளம், ராம சமுத்திரம் ஆகிய கண்மாய்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செங்களம் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு வெள்ளிக்கிழமை (அக்.9) நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பழனி பொதுப்பணித்துறையின் நிர்வாக பொறியாளர் உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: ஊரகச்சாலை மேம்பாட்டு டெண்டர்கள் அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு