மதுரை: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எங்களது ஊரான மாவடி, ராமச்சந்திராபுரத்தில் சேவல் சண்டை போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கோரி காவல் துறையினரிடம் மனு அளித்தோம். ஆனால், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, சேவல் சண்டை போட்டி நடத்துவதற்கு உரிய பாதுகாப்பும், அனுமதியும் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு இப்போதும் அனுமதி வழங்கப்படுகிறதா? சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது?' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், "கரோனா காலகட்டத்திற்கு முன்பு சேவல் சண்டை போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு சில இடங்களில் சேவல் சண்டை போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது, சில இடங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் வருடம்தோறும் பாரம்பரியமாக சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் சேவல் சண்டை போட்டியை நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் உறுதிமொழி பத்திரத்தினை நீதிமன்றத்திற்கு வழங்கத் தயாராக உள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் புதிய மனுவையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் பொறுப்பேற்பதாக உறுதிமொழி பத்திரத்தையும் திருநெல்வேலி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கவும், அதனை காவல்துறை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.