மதுரை வேல்முருகன் நகர் பூங்கா பகுதியில் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷனை மாற்று இடத்தில் தொடங்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”மதுரை வேல்முருகன் நகர்ப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். தற்போது அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக 240 சதுர மீட்டர் நிலம் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த பூங்காக்கள் வைகை நகர் பகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பூங்கா இடத்தில், மதுரை மாநகராட்சி சார்பில் கழிவு நீரை சேகரித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் பம்பிங் ஸ்டேஷன் கட்டுவதற்கான வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் அப்பகுதியில் குடியிருப்புக்கள் அதிகமாக உள்ளதால், பூங்கா இடத்தில் தொடங்காமல் மாற்று இடத்தில் அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநாகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.