மதுரை: மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை அருகே குன்னத்தூர் கிராமத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ், முனியசாமி ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர்.
இந்தகொலை தொடர்பாக, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி, ஊராட்சி செயலர் வீரணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து வரிச்சியூரை சேர்ந்த செந்தில், குன்னத்தூரைச் சேர்ந்த பாலகுரு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள், தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.
ஆனால், காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். கொலை நடந்த அன்று குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி, ஊராட்சி செயலர் வீரணன் ஆகியோருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள், இருவரையும் வழக்கில் தொடர்பு இல்லை எனக் கூறி காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கவும், வழக்கு விசாரணை சரியான முறையில் நடப்பதற்கும் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தபோது, குன்னத்தூர் இரட்டை கொலை வழக்கின் விசாரணை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த முழுமையான தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய ஊமச்சிக்குளம் சரகம் காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: தேர்தல் முன்விரோதம் காரணமாக இரட்டைக்கொலை - இருவர் கைது!