மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்த கருத்தப்பெரியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியதாவது;
"என்னுடைய மகன் வெள்ளை பிரியன், அபிநயா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தையும், நான்கு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை பிரியன், அபிநயா இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் அபிநயா உயிரிழந்தார். இதனால், வெள்ளை பிரியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சிறையில் வெள்ளை பிரியன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் என்னுடைய நான்கு வயது பேரன், ஆறு வயது பேத்தி இருவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது எனக்கு 67 வயது ஆகிறது. என்னுடைய மனைவிக்கு 53 வயது ஆகிறது. இவர்களை பாதுகாப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
இதனால் பெண்களுக்கான தமிழ்நாடு இழப்பீட்டுத் திட்டம், குழந்தைகளை பாலியல் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சட்டம், குற்றச் சட்டம் 2018இன் படி எனது பேத்தி, பேரன் இருவருக்கும் இழப்பீடு தொகையாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்" என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மூன்று வாரம் ஒத்தி வைத்தார்.