மதுரை: திருச்சி பாலக்கரைச் சேர்ந்த போதேஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், 'எனது சகோதரர் கோபிகண்ணன் திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
கடந்த மே 9ஆம் தேதி எனது அண்ணன் தனது மகளுடன் ஹீலர் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது, 6 பேர் கொண்ட கும்பல் அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. கொலை குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நீதிமன்ற காவல்நிலைய காவல்துறையினர், பிரீ கேஷ் பிரசாத், உதயகுமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில், ஹேமந்த் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். ஹேமந்த்குமார் கொலை வழக்கில் கைதானவர்களுக்காக கோபிகண்ணன் ஆஜரானார். பின்னர், என் சகோதரரையும் அந்தக் கொலை வழக்கில் சேர்த்தனர்.
அந்தக் கொலைக்கு பழிவாங்கும் வகையில் எனது சகோதரர் கோபிகண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார். எனது சகோதரர் கொலையில் பலருக்கு உள்ள தொடர்புகள் குறித்த விபரங்களைக் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளோம்.
ஆனால் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, எனது சகோதரரின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதி இளங்கோவன், "காவல்துறையினர் தரப்பில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மெக்சிகோ நாட்டு பெண் கொலை: கணவரின் தண்டனை நிறுத்திவைப்பு!