மதுரை: செங்கல்பட்டு அரசினர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவன் கோகுல் ஸ்ரீ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றும் நோக்கில் அரசு நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக மக்கள் கண்காணிப்பகத்தின் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 29-ஆம் தேதி தாம்பரம் ரயில்வே காவல்துறையால் திருட்டு வழக்கு ஒன்றில் சிறுவன் கோகுல்ஸ்ரீ (17) கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, கூட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். இதன் காரணமாக சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தனது உண்மை கண்டறியும் குழு மூலமாக பல்வேறு விஷயங்களை வெளிக்கொணந்துள்ளது. இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது. ஆனால் கொலைக்கு காரணமான நபர்களை காப்பாற்றும் நோக்கில் அரசு நிர்வாகம் தொடர்ந்து மெத்தனம் காட்டுகிறது என குற்றம் சாட்டியுள்ளது.
அது குறித்து இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கோகுல்ஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கொலையான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியும், இலவச வீடும் கொடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார். ஆனால் காவல் மரணங்கள் நிகழும்போதெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகுதான் நடவடிக்கையே எடுக்கப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அரசு உயர் அலுவலர்கள் தற்போதுவரை செயல்பட மறுக்கிறார்கள் என்பதனை சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலை வழக்கினை கையாண்ட அனுபவத்தின் மூலம் தெரிவிக்கிறோம்.
இந்நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் தன்னுடைய ஐந்து குழந்தைகளுடன் வாழும் கோகுல்ஸ்ரீயின் தாயார் பிரியாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, சிறுவனின் சித்திரவதைக் கொலைக்குக் காரணமானவர்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சமூகநலத்துறையின் உயர் அலுவலர்கள் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வதை ஏற்க முடியாது. கொலையான சிறுவனின் உடற்கூராய்வு அறிக்கை இரண்டரை மாதப் போராட்டத்திற்குப் பிறகு அண்மையில்தான் பெற முடிந்தது.
அதிலும் கூட புகைப்படம், வீடியோ பதிவுகள் இதுவரை வழங்கப்படவில்லை. காவல் மரணத்தில் இறந்து போனவரின் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்பு உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதன் அறிக்கை வழங்கப்பட வேண்டும் என சந்தோஷ் எதிர் மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.