மதுரை: கோடை விடுமுறையை முன்னிட்டு பாண்டியன், நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் நிலவுகிறது. ஆகையால் தாம்பரம் - செங்கோட்டை ரயிலின் காலி பெட்டிகளை பயன்படுத்தி வார இறுதி நாட்களில் மதுரை, தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
அதாவது வார இறுதி நாளான வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மதுரை வழியாக 15 ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அனைத்து ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் 200-ஐ தாண்டியுள்ளது. தட்கல் முன்பதிவு என்பது குதிரை கொம்பாகவே உள்ளது. தற்போது ஏப்ரல், மே மாதங்கள் கோடை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து சனிக்கிழமைகளில் தாம்பரத்திற்கு இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், "தாம்பரம் - செங்கோட்டை ரயில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இயக்கப்பட்டு 5 நாட்கள் தாம்பரம் பணிமனையிலேயே காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் காலிப்பெட்டிகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமைகளில் மதுரை, தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
ஏற்கனவே இயங்கி வரும் தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் கால அட்டவணையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஏப்ரல், மே இரு மாதங்கள் தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் இயக்கினால் பயணிகளுக்கும் சௌகரியமாக இருப்பதோடு மட்டுமின்றி ரயில்வே துறைக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால் தெற்கு ரயில்வே உடனடியாக இதை இயக்க முன்வர வேண்டும்" என கூறுகின்றனர்.
இதையும் படிங்க: Tamil New Year: தமிழ் புத்தாண்டு தினத்தில் உங்கள் ராசிக்கான பலன்கள்!