மதுரை மாவட்டம், மேலூர் அருகே வஞ்சிநகரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன்கள் பாலசந்தர், பாலகுமார். இவர்கள் இருவரும் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அறிவியல் மீதும் அது சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீதும் தணியாத ஆர்வம் கொண்ட சகோதரர்கள் இருவரும் தங்களது உறவினர் செந்தில் ஆலோசனைப்படி பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆம்புலன்ஸ் வருவதை முன்கூட்டியே ஜிபிஆர்எஸ் முறை மூலம், அந்தந்த சிக்னல்களில் 5 நிமிடத்திற்கு முன்னரே எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் புதுமையான கண்டுபிடிப்பைக் கண்டறிந்து அசத்தினர். இதனை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட பலர் ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, நவீன முறையில் புரோட்டா மாவை பிசைந்து வீச்சாக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவியானது மின்மோட்டார், ஹைட்ராலிக் இயந்திர உதவியுடன் செயல்படுகின்றது. புரோட்டாவுக்காகப் பிசைந்த மாவை இந்த கருவியில் வைத்தால் புரோட்டாவுக்குத் தேவையான மாவுகள் பிசைந்து வீச்சாக வெளிவருகின்றது. அதனை மடித்து தோசைக்கல்லில் வைத்து வார்த்தெடுத்தால் போதும் நொடியில் புரோட்டா தயார் செய்து விடலாம்.
இதுகுறித்து சகோதர்கள் கூறுகையில், " இக்கருவியைப் பயன்படுத்துவதன் வாயிலாக எண்ணெய் செலவு மிச்சமாவதுடன், ஒருமணி நேரத்திற்கு 500 புரோட்டாக்கள் வரை தயார் செய்ய முடியும். சாதாரண மனித ஆற்றலைவிட மூன்று மடங்கு பயன் தருகிறது. இதே ஹைட்ராலிக் முறையில் நூடுல்ஸ், சப்பாத்தி, இடியாப்பம் உள்ளிட்டவற்றையும் விரைவாகச் சமைக்க முடியும். இந்தக் கருவியை உருவாக்க ரூ.2.5 லட்சம் தான் செலவானது" எனத் தெரிவித்தனர்.