மதுரை: மதுரை மாவட்டம், பாலமேட்டில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜ் விலா பக்கம் காளை மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அவரது பெற்றோர் நினைவு தினம் அனுசரித்தனர்.
இந்த நிலையில், ஈடிவி பாரத்திற்கு அரவிந்தராஜின் தந்தையார் ராஜேந்திரன் கண்ணீர் மல்க அளித்த நேர்காணலில், "தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது மகன் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு போது ஒன்பது காளைகள் பிடித்து முன்னணியில் இருந்தார். அந்த ஆண்டு முதல் பரிசு வாங்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து விளையாடினார். என்னுடைய மகனின் இறப்பு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும்.
என்னுடைய மூத்த மகன் நரேந்திர ராஜூயை விட இளைய மகன் அரவிந்தராஜ் மிகத்துடிப்பானவர். தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தின் மீது அவருக்கு இயல்பிலேயே மிக ஆர்வம் இருந்தது. அவர் இறந்தபோது கூட நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
ஆனால் என்னுடைய வேண்டுகோள் என்பது அவருக்கு ஒரு நடுகல் எழுப்பி, நினைவிடம் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதுதான். இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி அலுவலர் மற்றும் கிராம கமிட்டிக்கும் மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு தகவலோ நடவடிக்கையோ இல்லை.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இப்படி ஒரு வீரன் விளையாடினான் என்பதை எதிர்கால தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும். அந்த ஒரு பேரும், புகழும் அரவிந்தராஜுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். என் மகனுக்கு ஏற்பட்ட நிலை மற்ற ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் கடவுளிடம் எனது முறையீடு. நான் படுகின்ற துயரமும், வேதனையும் மற்ற பெற்றோர்கள் நிச்சயம் அடையக்கூடாது. தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு நடைபெற வேண்டும்.
பாலமேட்டில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டு என்பது நமது முன்னோர்களால் தொன்று தொட்டு பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை அப்படி ஒரு சம்பவம் இங்கு நடந்ததில்லை. துரதிருஷ்டவசமாக எனக்கு நடந்து இருக்கிறது. என் மகன் வீரனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பதில் எனக்குப் பெருமை" என்றார்.
இதனைத் தொடர்ந்து பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் பூக்குமார் பாண்டியர் கூறுகையில், "ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டில் விளையாடி உயிர் நீத்திருக்கின்ற அரவிந்தராஜ் விரைவாக பாலமேடு ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும். பாலமேடு ஜல்லிக்கட்டைக் காண்பதற்காக வந்திருந்தேன்.
அச்சமயம் மாடுபிடி வீரர் அரவிந்தராஜின் நினைவஞ்சலியில் பங்கேற்றேன். இதுவரை அவருக்கென்று எந்த ஒரு நினைவுச் சின்னமோ அடையாளமோ ஏற்படுத்தப்படவில்லை. மிகுந்த வேதனையாக உள்ளது. இதனை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
மேலும், அரவிந்தராஜின் வயதான தாயார் தெய்வானை மகனை நினைத்து மிகவும் வேதனையில் உள்ளார். மாடுபிடி வீரர்களுக்குத் தமிழக வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. அந்த அடிப்படையில் அரவிந்தராஜின் மூத்த சகோதரர் நரேந்திர ராஜுக்கு அவரது கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அந்த குடும்பத்திற்கு மிகவும் நல்லதாக அமையும் என கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 16 வருடங்களாக மாறாத தந்தையின் பாசம்.. 17 கி.மீ சைக்கிளில் சீர் சுமக்கும் உறவு!