மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கீழரத வீதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (23). அதே தெருவில் வசித்து வரும் நாகராஜ் என்பவரும் மகாலட்சுமியும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்ணை நாகராஜன் பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான தம்பதி விருதுநகரில் உள்ள மகாலட்சுமியின் அக்கா வீட்டில் ஆறு மாதகாலம் வசித்து வந்துள்ளனர். நாகராஜ் அங்கேயே வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே நாகராஜின் தாயார், இருவரையும் ஏற்றுக்கொள்வதாக கூறி மதுரைக்கு வரவழைத்துள்ளார்.
மனைவியை அழைத்துக்கொண்டு நாகராஜ் தனது வீட்டிற்கு வந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமியை சில மாதம் அவரது தாயார் வீட்டில் இருக்குமாறு நாகராஜின் தாயார் வற்புறுத்தியுள்ளார். மகாலட்சுமி தாயார் வீட்டிற்கு சென்று ஆறு மாதமாகியும் நாகராஜ் மகாலட்சுமியை காண வரவில்லை. நாகராஜின் குடும்பத்தினர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து வந்துள்ளனர். கர்ப்பிணியான மகாலட்சுமி நாகராஜின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.
அவன் இனிமேல் வரமாட்டான், அவனுக்கு வேறு கல்யாணம் செய்து வைப்பதாகக் கூறி கர்ப்பிணியான மகாலட்சுமியை விரட்டியடித்தனர். காதலனை நம்பி வந்து ஏமாற்றமடைந்த மகலாட்சுமி, திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் கணவர் வீட்டாருக்கு எதிராக புகாரளித்தார். தற்போது, மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன, இதுவரை நாகராஜ் வந்து பார்க்கவில்லை, அவரது கணவர் எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியாத நிலையில் கைக்குழந்தையுடன் மகாலட்சுமி போராடி வருகிறார்.
தன் கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மகாலட்சுமிக்கு, திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் மதன கலா உறுதுணையாகவும் பெற்ற தாய் போல் பாதுகாத்து வருகிறார்.
இதையும் படிங்க: புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை: ஒப்பாரி போராட்டம் நடத்திய பெண்கள்!