மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள நரியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர். அவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.
பாண்டியம்மாளின் மூன்றாவது தம்பி நாகராஜன். சிறுமிக்கும், சிறுமியின் தாய் மாமன் நாகராஜன் என்பவருக்கும் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள பழைய முனியாண்டி விலாஸ் உணவகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(ஜூன் 28) திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதனை அடுத்து குழந்தைகள் உதவி மைய உறுப்பினர் மாலதி என்பவர், குழந்தைத் திருமணம் நடைபெற இருப்பதாக நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் சந்திரசேகர் பாண்டியம்மாள் ஆகியோரிடம் விசாரணை செய்தபோது, சிறுமிக்கு 17 வயது நிரம்பியதும் சிறுமிக்கு தாய்மாமன் நாகராஜன் உடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் சிறுமியின் பெற்றோர் சந்திரசேகர், பாண்டியம்மாள், தாய்மாமன் நாகராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.