மதுரை: பனைமரம் குறித்து பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் அசோக்குமார்.
விதைப்பந்து, பனங்கொட்டை தாத்தா, பனைமரம் நடுதல் என குழந்தைகளுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அசோக்குமார், கிறிஸ்துஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை பனங்கொட்டையில் உருவாக்கி, குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு இலவசமாக வழங்கவிருக்கிறார்.
இதுகுறித்து அசோக்குமார் கூறுகையில், 'எதிர்காலத் தலைமுறையினருக்கு பனை மரம் சூழ்ந்த உலகத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எனது தீராத கனவின் அடிப்படையில் இந்த முறை கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையை பனங்கொட்டையில் உருவாக்கி வருகிறேன். தற்போது எனது பல்வேறு பணிகளுக்கிடையே நாளொன்றுக்கு மூன்று பொம்மைகளை தயார் செய்கிறேன்.
கிறிஸ்தவர்களுக்கு டிசம்பர் மாதம் புனித மாதமாகத் திகழ்வதால், இதனை மதக் கண்ணோட்டத்தில் இல்லாமல், அன்பைப் போதிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா என்ற அடிப்படையில் பனங்கொட்டையில் பொம்மைகள் செய்து சமூக ஆர்வலர்கள் மூலமாக குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் பனை மரம் குறித்த அக்கறையும், தேடுதலும் குழந்தைகளுக்கு அதிகமாகும் என்பது எனது நம்பிக்கை' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விளைவுகள் கடுமையாக இருக்கும் - காவல்துறையை எச்சரிக்கும் திமுக!