மதுரை: பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. இந்து அல்லாத எவரும் கோயிலுக்குள் நுழைவதை தடுக்கும் வண்ணமும் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும் மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோயிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு உள்ள சூழலில் பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோயிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது.
எனவே, பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் கோயில் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: கோயில்களில் மூடி வைக்கப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு!
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஸ்ரீமதி முன்பு கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்து அல்லாதவர்கள் கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் பழனி கோயிலில் ஏற்கனவே இருந்த அதே இடத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இதனையடுத்து பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை செயல் அலுவலரால் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவை நீக்கி கொள்ள வேண்டும் என இந்து அறநிலையத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: தேனி ஐயப்பன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்!