மதுரை: தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்றுத் திடலில் இன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு தொடங்கிஉள்ளது. பாலமேடு மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆண்டுதோறும் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி நடைபெறும். அதேபோல இன்று கரோனா காட்டுப்பாடுகளுடன் போட்டி தொடங்கியது.
ஆன் லைன் மூலமாகப் பதிவு செய்து தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். 700 காளைகள் பங்கேற்றுள்ளன. முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கும் கரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாய பெறப்பட்டது.
வாடிவாசலில் போட்டியில் கலந்து கொள்ளக் கூடிய காளைகளின் உரிமையாளர், ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குறைந்தளவு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவசரக்கால மருத்துவ தேவைக்காக மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புத்துறை வாகனங்களும் தாயர் நிலையில் உள்ளன. ஒவ்வொரு சுற்றாக நடைபெற உள்ள போட்டியில் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்ற கணக்கில் 4 மணி வரை நடைபெறும்.
இப்போட்டியில் அதிக காளைகளை பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட உள்ளது. சிறந்த காளைக்கு பரிசாக காங்கேயம் நாட்டு பசுமாடு கன்றுகுட்டியுடன் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இருசக்கர வாகனம், அண்டா, எல்இடி டிவி, வாஷிங் மிஷின், தங்கக்காசு, வெள்ளிக்காசு, நாற்காலி உள்ளிட்ட ஏராளனமான பரிசுப்பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளைப் பிடித்த வீரருக்கு கார் பரிசு