மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மறவபட்டியைச் சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர் ஒருவர், இவரின் புத்தகப் பையை மறைத்துவைத்து விளையாடியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாணவர் சரவணகுமார், புத்தகப் பையை வைத்து ஏன் விளையாடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் என்ற மாணவர் சரவணக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமின்றி சாதியைக் கூறி திட்டிவிட்டு சரவணகுமாரின் முதுகில் பிளேடால் கிழித்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை, தனது மகன் மீது சாதிய வன்மத்தால் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர் சரவணகுமாருக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுவரும் நிலையில், இச்சம்பவம் குறித்து பாலமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழர்கள் எழுத்தறிவு உள்ள சமூகமாக வாழ்ந்துள்ளனர் - கீழடி ஆய்வு குறித்து வைகோ பெருமிதம்