நடிகர் விவேக்கின் திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரது மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது நெருங்கிய நண்பர்கள், கல்லூரித் தோழர்கள் உள்ளிட்ட பலரும் அவருடனான நினைவுகளை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் அவருடன் பயின்ற காலத்தின் நினைவுகளை ஓவியர் ரவிக்குமார் நினைவுகூர்ந்துள்ளார்.
அதில், ”1980-83 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்தபோது, கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் மூத்தவர் விவேக். ஓவியர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், நாடகக் கலைஞர்கள் என்று இருந்த அப்போதைய கல்லூரியின் கலைக்குழுவில்தான் விவேக்கோடு நிறைந்த நட்பு.
விவேக்கின் கல்லூரி நாள்கள்
அதற்கும் முன்னால் விவேக்கின் எழுத்து, கல்லூரி ஆண்டு மலரின் மூலமாக அறிமுகம். ’மயிர்ப்படகு’ என்பது அந்தக் கவிதையின் தலைப்பு என நினைக்கிறேன்...
எங்கள் ஐயா சுதானந்தா எங்களையெல்லாம் எப்போதும் இழுத்துக் கொண்டு அலைவார். புதிய புதிய கருப்பொருள்களை, உத்திகளை, உருவாக்க முறைகளை முன் வைப்பார். நாங்கள் அப்போது சுவர்ப் பத்திரிக்கை ஒன்றை நடத்தி வந்தோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு பெரிய போர்டில் கவிதை ஆக்கங்களை, புகைப்படங்கள், ஓவியங்கள் போன்றவற்றோடு தாளில் வண்ண வண்ணமாக எழுதி ஒட்டி வைப்போம். அதிலும் விவேக் சிறப்பாகப் பங்கெடுப்பார். மாணவர்களின் படைப்பாக்க ஆற்றலை வளர்த்தது அந்தச் சுவர்ப் பத்திரிகை.
அப்படித்தான் அப்போது வந்த கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நடந்த பல்வேறு கலை நிகழ்வுகளில் நாங்கள் இணைந்து பங்கேற்றுக் கலக்கினோம்...
புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய "Around world in 80 days" நூலைப்போலவே நூலின் தலைப்பு ரொம்பப் புகழ் பெற்றது. எங்களை அந்தத் தலைப்பு ரொம்பவே அந்த நேரம் ஈர்த்தது. அதனை ஒட்டி, எங்கள் கல்லூரிக் கலைக்குழு "Around Madurai in 15 Minutes" என்றொரு நாடகத்தை உருவாக்க நினைத்தது. அதற்கு விதை போட்டவர் தமிழ்த்துறைப் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா.
நாடகம் உருவானதே ஒரு கூட்டு முயற்சியில், அனைவரும் கல்லூரி வளாகத்தில் மெயின் ஹால் கட்டடம் அருகிலுள்ள ஒரு பெரிய மரத்தடி நிழலில் வட்டாக அமர்ந்து, மதுரையின் பல்வேறு காட்சிப் படிமங்களை, சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். அதில் அதிசுவாரசியமாய் இருந்த, மதுரையில் கிராமத்தன்மை மற்றும் நகரத் தன்மையை வெளிப்படுத்தும், நடிப்புக்கும் வாய்ப்பளிக்கும், பார்வையாளருக்கும் சுவாரசியத்தைத் தரக்கூடியதாகச் சிலவற்றைத் தேர்வு செய்து அதனை நாடகமாக்கினோம்.
ஆங்கிலப் பாடகனாக அசத்திய விவேக்
மதுரையில் தெருவோரத்தில் லேகியம் விற்பவர்கள், டவுன் ஹால் ரோட்டில் புல்லாங்குழல் வாசிப்பவர், தெருவோரம் அமர்ந்து ஆர்மோனியம் வாசித்தபடி யாசகம் கேட்கும் கண்தெரியாத இசைஞர்கள், புரோட்டாக் கடை, நவீன இசை நிகழ்வுகள் நடக்கும் கேசி ரெஸ்டாரெண்ட் இன்றும் இதுபோன்ற சிலவற்றைத் தேர்ந்து அவற்றைக் காட்சிப் படிமமாக்கி, நாடக நிகழ்வாக்கினோம். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பஞ்ச். கடைசியில், இசையின் உச்சம் போல, கண்தெரியாத தெருப்பாடகன் பாடலும், கோசி ரெஸ்ட்டாரெண்டில் வண்ண விளக்குகள் படபடக்க நடக்கும் நவீன ஆங்கில இசையும் மாற்றி மாற்றிக் கட்ஷாட் வடிவத்தில் அமைத்தோம்.
இடது புறம் ஸ்பாட் லைட் வெளிச்சம் தெருப்பாடகன் மீது படும்போது அவன் பாடுவான்... அப்படியே விளக்கணைந்து அந்த நொடியே வண்ணங்கள் மிளிற, வலதுபுறம் கோசி ரெஸ்டாரெண்டடின் ஆங்கிலப் பாடகன் பாடுவான்... இரண்டு மூன்று முறை இது மாறி மாறி வேகமெடுக்கும்...
தெருப்பாடகனாக நடித்தது நான். ஆங்கில இசைஞனாக நடித்தது விவேக்.
அதற்கான ஒத்திகை மூன்று நாள்கள் மெயின் ஹாலில் நடந்தது. மெயின் ஹால் முழுக்க அவரவர் பாத்திரங்களை ஆங்காங்கே நடித்தும் படித்தும் பாடியும் அசைந்தும் கொண்டிந்தனர். எனக்கு, தியாகராஜ பாகவதரின் "தீன கருணா கரனே நடராஜா நீல கண்டனே..." பாடலை மனப்பாடம் செய்யச் சுதானந்தா சொல்லியிருந்தார். அதனையும், ஆர்மோனியம் வாசிப்பது போன்ற பாவனை செய்து கொண்டே பாட வேண்டும். பாகவதர் குரல் உச்சஸ்தாயி என்றாலும், அந்த வயதில் கத்திக் கத்தி பாகவதர் போல ஒரு ஸ்தாயியை நானும் தொட்டுப் பாட ஆரம்பித்தேன்.
நாடக நிகழ்வின் உச்சமாக அந்தக் காட்சி பட்டையைக் கிளப்பியது. அதிலும் விவேக் அநாயாசமாக நகைச்சுவை ததும்பும் உடலசைவுடன், நவீன உடையுடன், ஆங்கில இசைப் பாடலை பாடி அசத்திவிட்டார். எனக்கு மஞ்சள் ஒளி ஸ்பாட் லைட்டும், விவேக்குக்கு பல வண்ணமாய் மிளிரும் விளக்கொளியும் மாறி மாறி இசையோடு வழங்கப்பட்டபோது, பார்வையாளர்களின் கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆனது.
அதன் பிறகு கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பு, மதுரை அண்ணா நகரில் அப்போது விவேக் குடியிருந்த வீட்டுக்கு ஒரு முறை நண்பர்களோடு சென்றோம். அதன் பிறகு ஒரு முறை நேரில் பார்த்தது.
அளவுக்கு அதிகமாக நடிப்பு தாகத்தில் சென்னை சென்று, பார்த்த வேலையை விட்டு, ஒரு கலைஞனாக, அதுவும் நகைச்சுவைக் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி, சின்னக் கலைவாணர் என்கிற கிடைத்தற்கரிய பட்டமும் பெற்று, மேலும் மேலும் வளர்ந்த விவேக், இப்படி திடுதிப்பென மறைந்து போனது... என்னத்தைச் சொல்ல!
என்றாலும் தமிழ் மக்களின் வாழ்வோடு உன் நகைச்சுவையும் தமிழும் எப்போதும் கலந்திருக்கும் நண்பா...சென்று வா...” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்’ - விவேக் இறப்புக்கு மோடி இரங்கல்