மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். இவர், டி.குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணராஜ், முனியசாமி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதனால் சென்னை சென்று தலைமறைவானார். அங்கு இருந்த செந்தில்குமார் திடீரென மாயமானதாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடிக்கக் கோரியும் அவரது மனைவி காவல் துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் படி விசாரித்ததில், அவரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் கொலை செய்து உடலை வீசியது தெரிய வந்தது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் சுட்டுக் கொன்று, அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வரிச்சியூர் செல்வம், தனக்கு ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏற்கனவே மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போது, அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கில் புதிதாக ஒட்டப்பிடாரம் காவல் துறையினர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் காவல் துறையினர், மனு குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தீபாவளி அன்று போதையில் காவலரை தாக்கிய நபர் கைது.. மேலும் ஒருவருக்கு வலை வீச்சு!