மதுரை: அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உலக தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டு அரங்கம் அமைய உள்ளது. அந்த இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். அவருடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இதனையடுத்து அலங்காநல்லூர் அருகே உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கீழக்கரை கிராமத்தில் 66.81 ஏக்கர் பரப்பளவில் இந்த அரங்கம் அமைய உள்ளது.
தற்போது இந்த அரங்கத்திற்கு மக்கள் வந்து செல்லக்கூடிய வகையில் சாலை போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் இங்கு வந்துள்ளேன். இவ்விடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை வாடிப்பட்டியில் இருந்து செல்லும் வகையில் அமைய உள்ளது. அந்த சாலையோடு இணைக்க இணைப்பு சாலை அமைப்பது குறித்து இங்கே தொடர்புள்ள துறைகளின் பொறியாளர்களும் வந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக இந்த அரங்கம் அமைக்கப்பட்டாலும் ஜல்லிக்கட்டு நடைபெறாத காலங்களில் மற்ற விளையாட்டுகளும் நடைபெறும் வகையில் இந்த அரங்கத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பெயின் போன்ற நாடுகளில் மாடு பிடி விளையாட்டுக்காகவே நிரந்தர அரங்குகள் அமைத்து விளையாடி வருகின்றனர். அதன் தரத்தை விட மேம்பட்டதாக இந்த ஜல்லிக்கட்டு அரங்கை ஓராண்டுக்குள் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த அரங்கத்தை சிறப்பாக அமைப்பதற்கு தனியார் கட்டிடக்கலை வல்லுநர்களின் ஆலோசனையையும் கோரியுள்ளோம்.
இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் . ஜல்லிக்கட்டு நடைபெறாத காலங்களில் மக்கள் விருப்பத்திற்கேற்ப விளையாட்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படும். தற்போது அமைய உள்ள இந்த அரங்கத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அலங்காநல்லூர் மக்கள் விரும்புகின்ற வகையில் முடிவு செய்யப்படும். ஆகையால் தற்போதைக்கு அந்த சிக்கல் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.
மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம் குறித்து முதலமைச்சர் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதனை ஏற்று அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நூலகத்தில் உள்ளே அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்த மூன்று மாதங்களில் கட்டுமானம் முழுவதுமாக நிறைவு பெறும். அதற்குப் பிறகு முதலமைச்சர் திறந்து வைப்பார். கலைஞர் நூலக கட்டுமானத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை அடிப்படையில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிறகு மதுரையில் உள்ள கலைஞர் நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். அப்போது திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் டோல்கேட் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் புகார் தெரிவித்துள்ளோம்.
அந்த அடிப்படையில் சில இடங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
இதையும் படிங்க: கசாப்பு கடைக்கு ஆடு விற்றவர் கோடீஸ்வரர் ஆனது எப்படி?