தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”எங்கள் ஊரான தாப்பாத்தி கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள தேவையற்ற மணலை அள்ளுவதற்கு அரசிடம் அனுமதி பெற்று முறைகேடாக வைப்பாற்றில் மணல் அள்ளி வருகின்றனர்.
வைப்பாறு ஆற்றுப்படுகை அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மணல் அள்ளிக்கொள்ள அனுமதி பெற்று, அருகில் 500 மீட்டர் தூரத்தில் உள்ள வைப்பாற்று படுகையிலிருந்து சுமார் 30 மீட்டர் ஆழத்திற்கு இயந்திரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான யூனிட் மணலை அள்ளி விற்பனை செய்துவருகின்றனர்.
ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக்கிளைக்குட்பட்ட 13 மாவட்டங்களில் உபரி மண் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் விதமாக விளைநிலத்திலிருந்து மணலை அள்ளிக் கொள்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை தவறாகப் பயன்படுத்தி ஆற்று மணலை அள்ளி வியாபாரம் செய்துவருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் விவசாயத்தையும் பாதிக்கச் செய்யும். எனவே முறைகேடாக மணல் அள்ளி வருவதை தடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வைப்பாற்றில் மணல் அள்ள எவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இவ்வாறு மணல் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது அரசுக்குத் தெரியாதா என்றும் கேள்வியெழுப்பினர்.
நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது மாவட்ட ஆட்சியருக்குத் தெரியாதா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர். மணல் அள்ளுவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், உடனடியாக நிரஞ்சன் என்ற வழக்கறிஞர் தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும் எனவும், அந்த ஆணையம் குறிப்பிட்ட இடத்தில் இன்றே நேரில் ஆய்வுசெய்து நாளை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது மாவட்ட நிர்வாகம் வழக்கறிஞருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு - மாநில அரசு பதிலளிக்க உத்தரவு