புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அம்புகோவிலைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அம்புகோவில் பகுதியில் சுமார் 400 விவசாயக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் 312 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக எங்கள் நிலத்தில் விளையும் நெல்லை சுமார் 15 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று வந்தோம்.
இதில் எங்களுக்கு பல சிரமங்கள் இருந்தன. இதனால், எங்கள் பகுதியில் ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அம்புகோவில் பகுதியில் அரசுக்கு சொந்தமான 33 சென்ட் இடத்தில் உலர் தளம் வசதியுடன் சுமார் 100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யும் நிலையத்தை அமைத்தது.
ஆனால் தற்போது அரசியல் செல்வாக்குள்ள சீமான், ராஜா சகோதரர்கள் தங்களுக்கு செந்தமான தனியார் நிலத்திற்கு இந்த நெல்கொள்முதல் நிலையத்தை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு சொந்தமான நிலத்திற்கு கொள்முதல் நிலையத்தை கொண்டு சென்றால் அங்கு பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளன . மேலும் அவர்களது நிலத்திற்கு அருகே மின்மாற்றி பெட்டியும் உள்ளது. இதனால் அந்த இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, தனியாருக்குச் சொந்தமான இடத்திற்கு இந்த கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது என சிவில் சப்ளைஸ் அலுவலர்கள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவானது நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை நேரில் சந்தித்து கொள்முதல் நிலையம் எங்கே அமைக்க வேண்டும் என்று அறிக்கையை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் 3 வாரங்களில் உரிய உத்தரவை நுகர்பொருள் வாணிப கழகம் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.