மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கள் பொறுப்பில் வங்கியில் இருந்து எடுத்துச்சென்று அணிவித்து, வங்கியில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தைப்பெறுவது தொடர்பாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "விடுதலைப் போராட்ட வீரரான முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர்ப் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த நாளை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பாக தங்க கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச்சென்று, பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவித்து, மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.
இதற்காக அதிமுக பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்றுச்செல்வார்கள். தற்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதிமுக பொருளாளராக உள்ள எனக்கே தங்க கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது.
ஆனால், வங்கி அலுவலர்கள் தங்க கவசத்தினை ஒப்படைக்க மறுப்புத்தெரிவித்து வருகின்றனர். எனவே, 2022 அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க கவசத்தினை எடுத்துச்செல்ல சட்டப்பூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கிக் கணக்கை அதிமுக சார்பாக கையாளும் அதிகாரத்தை வழங்கவும் வங்கி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக்கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வரும்போது வங்கி தரப்பிலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் தரப்பிலும் நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படுவதாகத் தெரிவித்திருந்தனர். இவ்வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பை வழக்கில் இணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தங்க கவசத்தை ஒப்படைக்க கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், 'அதிமுக கட்சி விதிமுறைகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கும்போது தற்காலிகப் பொருளாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுக-வில் தற்காலிக பொதுச்செயலர் நியமனம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. தங்க கவசத்தை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், 'அதிமுக-வில் 2,190 உறுப்பினர்கள் இணைந்து தற்காலி பொதுச்செயலரை தேர்வு செய்துள்ளனர். உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தற்காலிக பொதுச்செயலர் தேர்வு செல்லும் எனக் கூறியுள்ளது. மேலும் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்க கவசத்தை பெற எந்த அதிகாரமும் இல்லை. எனவே, சட்டத்தின்படி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தங்கக்கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு வழங்கி, அவர் பொறுப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச்சென்று அணிவித்து, மீண்டும் வங்கியில் ஒப்படைக்க வேண்டும் எனவும்; ராமநாதபுரம் காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு இந்த ஆண்டிற்கு மட்டுமே எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் - வாரிசுதாரர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கல்