விருதுநகர்: கீழபரளச்சியில், பிரிந்த கணவன் மனைவியைச் சேர்த்துவைத்தபோது ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முருகன், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தனக்குப் பிணை வழங்கக் கோரி மனு தாக்கல்செய்தார்.
இம்மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் கூறுகையில், “கணவன் - மனைவி பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிவிட்டனர்.
ஆனால், இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர், காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தவறான தகவலைக் கொடுத்தார். தற்போது உயர் நீதிமன்றத்தில், பிணை கோரி மனு தாக்கல்செய்துள்ளேன். இங்கும் தவறான தகவல் கொடுத்து உள்ளார்” என வாதிட்டார்.
நீதிமன்றம் ஒரு கோயில்
இதைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது, “நீதிமன்றம் ஒரு கோயிலைப் போன்றது. நீதிமன்றத்திற்கு நியாயமாக நடக்க வேண்டும். நடந்த உண்மையைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் வாதிடும் வழக்கறிஞருக்குத் துணிவு கிடைக்கும். வழக்கறிஞர்கள் வழங்கும் உண்மையான ஆவணங்களின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தெளிவான, நியாயமான தீர்ப்பு வழங்க முடியும்.
ஒரு தரப்பினருக்கு ஆதரவாக, சிறையில் உள்ளவருக்குப் பிணை வழங்கக் கூடாது என்ற நோக்கில் காவல் துறை அலுவலர் நீதிமன்றத்திற்குத் தவறான தகவல் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிணை மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
எனவே மருத்துவமனையில் உள்ளதாக கொடுக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காவல் ஆய்வாளர் தாக்கல்செய்ய வேண்டும். நீதிமன்றத்திற்குத் தவறான தகவல் கொடுத்த காவல் ஆய்வாளர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் காயமடைந்தவர்கள் எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் என்பது குறித்து உண்மையான தகவல்களை காவல் ஆய்வாளர் விரிவான அறிக்கையாகத் தாக்கல்செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி: முகவருக்குப் பிணை