மதுரை : தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தலை மனதில் கொண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் என சீர்மரபினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு தடை விதிக்கக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருந்து வருகின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மொத்தமாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மொத்தமாக உள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 சமூகத்தைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு 7 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 2.5 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இது ஏற்கத்தக்கதல்ல. அதனால், வன்னிய சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தடை விதித்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உள் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்"என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி எம்எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சென்னை தலைமை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : ராகுல் காந்தி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை- கைலாஷ் விஜய்வர்ஜியா!