மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி அரசு மேனிலைப்பள்ளி பின்புறம் பசும்பொன் தெருவில் ஆ.கொக்குளத்தைச் சேர்ந்த மாதவன் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு வீட்டை, வாடகைக்கு விடுவதற்காகக் கட்டி வந்தார். கட்டடத்தின் பூச்சு வேலை முடிவடைந்த நிலையில், இன்று கட்டடத்தின் மின்சார வயரிங் பணியில், ஏழு தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். மாலை 6.00 மணி அளவில் கீழ்த் தளத்தின் தூணில் ஏற்பட்ட விரிசல் காரணமாகத் தூண் சரிந்து, தரை தளம் முதலில் சரியத் தொடங்கியது.
இதனை மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த மாதவன் கண்டு, அலறல் சத்தத்துடன் கீழே உள்ள தொழிலாளிகளை எச்சரித்துக் கொண்டே குதித்துத் தப்ப, அனைத்து தொழிலாளர்களும் தரை தளம், முதல் தளம் ஆகிய பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், செக்கானூரணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, செக்கானூரணி, உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தகவலறிந்து வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டனர். முதலில் காசிநாதன், முருகன், ராஜேஷ் மூவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இரவு 8.00 மணி அளவில் அருண் என்ற நான்காவது நபர் காயங்களுடன் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜசேகர், மதுரை காவல்துறை டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட காவல் துறை எஸ்.பி. மணிவண்ணன் ஆகியோர் நேரில் வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர். இரவு 9.30 மணி நிலவரப்படி, மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காசிநாதன் உயிரிழந்தார். காவல் துறையினர் கட்டட உரிமையாளர் மாதவனைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் 3 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.