மதுரை மாநகரில் உள்ள போக்குவரத்து பயணிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பயன்தரும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை மதுரை மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுப் போக்குவரத்தை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
![125 ரூபாயில் மதுரையை சுத்தலாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-govt-transport-tourism-script-9025391_12032020180115_1203f_1584016275_222.jpg)
இதில் பேசிய அரசு போக்குவரத்து மதுரை மண்டல பொது மேலாளர் எஸ். ராஜேஸ்வரன், பொதுப் போக்குவரத்தால் ஏற்படும் நன்மைகளையும் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று முதல் பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, திருமங்கலம் போன்ற பல பேருந்து நிலையங்களில் பயணிகளை நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு பொது போக்குவரத்தை ,அதாவது அரசு பேருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கிக் கூறவிருக்கிறோம்.
![125 ரூபாயில் மதுரையை சுத்தலாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-govt-transport-tourism-script-9025391_12032020180115_1203f_1584016275_1100.jpg)
மேலும், ஏதேனும் குறைகள் இருப்பின் மக்கள் தெரிவித்தால், அதனை களைவதற்கும் போதுமான ஏற்பாடுகளை மேற்கொள்ள விரும்புகிறோம். மதுரை மாநகரில் உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம், உலகத் தமிழ்ச்சங்கம், காந்தி அருங்காட்சியகம், அழகர்கோயில் ஆகியவற்றுக்கு செல்ல இரண்டு விதமாக சுற்றுலா பேருந்துகளை ரூபாய் 125-க்கு அறிமுகம் செய்துள்ளோம். இச்சுற்றுலாவுக்கான பேருந்துகள் எல்லீஸ் நகரில் இருந்து இயக்கப்படும். போதுமான எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் சேர்ந்துவிட்டால், உடனடியாக அவர்களை அழைத்துக்கொண்டு அப்பேருந்து சுற்றுலாவுக்கு கிளம்பும். தேவைக்கு ஏற்ப பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து அவர்கள் செல்லும் இடங்களுக்கு பேருந்து இயக்கப்படுகின்றன. கோடை காலத்தில் அதிக பேருந்துகள் இயக்கப்படும், குளிர்சாதன பேருந்து விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.