மதுரை ஹாஜிமார் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது இக்பால். இவர் ’தூங்காவிழிகள் இரண்டு’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ், ஹிஜாபுல் தாஹிர் ஆகிய தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார். மதமோதல்களை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய பதிவுகளையும் அவர் தொடர்ந்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மதுரை திடீர் நகர் காவல் துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து இக்பாலைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இக்பால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கானது கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் இது குறித்து நடத்திய விசாரணையில், இக்பால், வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் அடங்கிய சில இடங்களைத் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மதுரை, ஹாஜிமார்தெரு, மஹபூப்பாளையம், கே.புதூர், பெத்தானியாபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், வீடுகளில் இன்று (மே.16) காலை முதல் தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் குழுவினர் சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் முடிவில் லேப்டாப், ஹார்டு டிஸ்க், செல்போன்கள், மெமரிகார்டு, சிம்கார்டு, பென்டிரைவ், தடை செய்யப்பட்ட புத்தகங்கள், துண்டுப் பிரசுங்கள் உள்ளிட்ட 16 வகையான ஆவணங்களை தேசியப் புலனாய்வு அலுவலர்கள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் இக்பாலிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : தடுப்பூசி தொடர்பான விவகாரங்களுக்கு ஆதார் தேவையில்லை!