மதுரை மாவட்டம் ஐயர் பங்களா பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து இன்று (ஏப். 1) தேர்தல் பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "மூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று சாதனை படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். சத்துணவு திட்டத்தின் மூலமாக மக்களின் மனங்களை வென்றார். அவரது வழியில் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றதோடு, தொடர்ந்து இரண்டாவது முறையாக 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்று சாதனை படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் எதிர்காலத் தலைமுறையினரின் நலனை கருத்தில் கொண்டதாகும். தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தவர் ஜெயலலிதா. ஏழை எளிய மக்களுக்கு இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டுக்குள் வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தற்போது 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை நிறைவேற்றவில்லை. இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்றார்கள். ஆனால் அவர்கள் வழங்கவில்லை. தற்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது. அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்துவோம்.
16 லட்சம் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளோம். கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். சுய உதவிக்குழுவினர் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். தாய்மார்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள விலையில்லா வாஷிங் மெஷின் திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவோம். ஆண்டிற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். மக்கள் நலன் கருதி இந்த சமூக பாதுகாப்பு திட்டங்களை நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
கடந்த திமுக ஆட்சியின்போது வெறும் ரூ.45 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகளை உருவாக்கியிருந்தார்கள். அதிமுக அரசு கடந்த பத்தாண்டுகளில் ரூ.6 லட்சத்து 87 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் சுமார் 19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். விவசாயத்திற்கு தேவையான உரம், விதை, நெல் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு இன்று இந்தியாவிலேயே நெல் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது. மேலும் மத்திய அரசின் விருதுகளையும் தமிழ்நாடு அரசு பல முறை வென்றுள்ளது.
மாணவர்களின் வளர்ச்சிக்காக 16 வகையான கல்வி உபகரணங்களை அரசு வழங்கி வருகிறது. இதன் விளைவாக உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் விழுக்காடு 49 ஆக உயர்ந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'பொய்கள் பேசியே ஆட்சியமைக்க எண்ணும் ஸ்டாலின்!'