விருதுநகரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்:
டிஎன்பிஎஸ்சி சார்பில் 9 ஆயிரத்து 351 பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வது தொடர்பாக 2017இல் அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நபர்களைத் தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
இந்தத் தேர்வில் நான் வெற்றி பெற்றேன். இதனடிப்படையில் 2019இல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டேன். அப்போது பணிக்கு சேராத நிலையில் ஏற்படும் காலி இடத்திற்கு எங்களை நியமிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். தற்போது இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட காலியிடங்களுக்கு எங்களைக் கொண்டு நிரப்பாமல் அதனையும் காலி பணியிடங்களாக கணக்கு காண்பித்து 9 ஆயிரத்து 882 காலிப்பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஆகவே 2015 முதல் 2018 வரை குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணியிடங்களை நிரப்பும் வரை 2019 ஜூலை 14இல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியமனம் வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, இவ்வழக்கை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: போடி கல்லூரி முறைகேடு: உயர் கல்வித் துறை பதிலளிக்க உத்தரவு