மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். வீதி உலாவின் போது சுவாமி முன்பு செல்வதற்காக யானை, ஒட்டகம் மற்றும் காளை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டு அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இருந்து பாா்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டு கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பார்வதிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு இடது கண்ணில் பாா்வை குறைபாடு ஏற்பட்டது. எனவே அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது தவிர பார்வதிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பாா்வதிக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் உருவானது.
எனவே சென்னையில் இருந்து வந்த நிபுணர் குழு, மதுரையில் உள்ள கால்நடை டாக்டர்களுடன் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தனா். ஆனாலும் சிகிச்சையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை. எனவே தாய்லாந்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் பிரத்யேக மருத்துவ குழுவினா் மதுரை வந்து சிகிச்சை வழங்கி சென்றனர்.
இந்நிலையில் யானை பாா்வதிக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்த, கடந்த 2 ஆண்டுகளில் எவ்வளவு செலவு ஏற்பட்டது? தாய்லாந்து மருத்துவக் குழுவினருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது? என்பவை தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.
அதற்கு கோயில் நிா்வாகம் கொடுத்த பதிலில், யானை பாா்வதிக்கு கடந்த 2020 மே மாதம் முதல், கண் குறைப்பாட்டுக்காக உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை மருந்துகள் வாங்கியது, வெளிநாட்டு- உள்நாட்டு மருத்துவா்கள் விமான கட்டணம் உள்பட மொத்தம் ரூ. 9,08,018 செலவு செய்யப்பட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 'வாரிசு' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!