மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவனம் விவகாரத்தில் முதலீட்டாளர்களுக்கு தங்களது சொத்துக்களை விற்று பிரச்னைக்குத் தீர்வு கான ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்ய கோரிய வழக்கு இன்று (ஆக 31) விசாரணைக்கு வந்தது. நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில் “மதுரையை தலைமையகமாக கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை பைபாஸ் மற்றும் திருச்சி, தஞ்சை என பல மாவட்டத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன.
நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி நகர் மற்றும் நகரமைப்பு இயக்குநரக (DTCP) அனுமதி பெற்று, குறைந்தபட்சம் 1000 மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்கிறோம்.
மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட்டுக்குள் கட்டுகிறோம்.
இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டு அதற்கான ரசீது கொடுக்கப்படுகிறது. நிலங்கள் விற்பனைக்குப் பிறகு வாடிக்கையாளர் பெயரில் பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. நியோமேக்ஸ் இதுவரை தென் தமிழகத்தில் 16 லே-அவுட் திட்டங்களில் 9 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரம் சதுர அடியில் (2,249.565 ஏக்கர்) அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தென்காசியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாஜக கவுன்சிலர் கைது!
நாங்கள் பதிவு செய்து கொடுக்கப்பட்ட நில விற்பனை பத்திரத்தை ஒரு அளவிற்கு செயல்படுத்தியுள்ளோம். 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எங்களிடம் 4 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரத்து 276.35 சதுர அடியில் (DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகள்) நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய தயாராக உள்ளன.
நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள் நிலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரிசெய்ய விரும்புவதாகவும், இந்தப்பிரச்னைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றம் நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன் இன்று (ஆக.31) விசாரணைக்கு வந்தது, நியோமேக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில்
பணம் முதலீட்டாளர்கள் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து நியோமேக்ஸ் தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "லஞ்சத்தை கட்டுப்படுத்துங்க ஐயா" - திருப்பூர் கலெக்டரிடம் கதறிய விவசாயிகள்!