பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"ஐந்தாவது, எட்டாவது ஆகிய வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும். எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சிப் பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. புதிய கல்விக் கொள்கை கட்டாயம் கிடையாது. வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரித்துக் கொள்ளலாம் என்று கூறி உள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லாதது. பாமக சார்பில் பிரதமரிடம் கடிதங்கள் மூலம் வலியுறுத்தியுள்ளோம். சமீபத்தில் இந்தத் திட்டத்திற்கு ஐந்தாவது உரிமத்தை விளம்பரமாக கொடுத்திருக்கிறது. அதற்கு முன்னதாக நான்கு உரிமம் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீர் மேலாண்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்து வரும் நிலையில் ரஜினி பெரியார் குறித்து கூறியது பற்றி பேசுவது தேவையற்றது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து முழுமையாக விசாரித்து யார் யார் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களைக் கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
நீட் தேர்விலும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பணம் கொடுத்து, தற்போது மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். அதிக மதிப்பெண் பெற்றும் பணம் இல்லாததால் பல மாணவர்கள் படிக்க முடியாமல் இருந்து வருகின்றனர். இதனால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் முற்றிலும் மாறுபாட்டை அடைந்துள்ளது. ஆகவே நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.
அவசர காலத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுகாதாரமும் மருத்துவமனைகளும் பொதுப்பட்டியலில் மத்திய அரசின் கீழ் கொண்டு வந்தார். இன்றளவும் அதே முறை பின்பற்றி வரப்படுகிறது. ஆனால், சுகாதாரத்தை மாநிலப் பட்டியலில் கொண்டுவருவதே முழுமையான தீர்வாக அமையும்" என்று கூறினார்.
இதையும் படியுங்க:
நீட் தேர்வு பயிற்சி 'நீட்டாக' நடைபெறுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்!