நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் உற்சாகமாக தொடங்கியது. இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அம்மன் யானை எய்த திருவிளையாடல் அலங்காரத்தில் எழுந்தருளியதையும் கொலு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர் .
திருவிழாவினையொட்டி சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலுச்சாவடியில் தனித்தனியாக 13 அரங்குகள் அமைக்கப்பட்டு சுந்தரேசுவரரின் திருவிளையாடல்களை விளக்கும் கொலு பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடர்பான பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் திருவிழா காலங்களில் சுவாமி மற்றும் அம்மன் வீதியுலா வரும் பல்வேறு வாகனங்களும் கொலு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளன . இது தவிர கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை முதல் இரவு வரை ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், பக்தி இசை கர்நாடக சங்கீதம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவினையொட்டி பொற்றாமரைக் குளம், அம்மன் சன்னதி மற்றும் சுவாமி சன்னதி உள்ளிட்ட கோயில் வளாக பகுதிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.