இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐஎஸ் ஆதரவாளர்களுடன் கோவையைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு வைத்திருப்பதாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகரில் உள்ள ஆறு இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் உபா சட்டத்தின் கீழ் மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கோவையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த சடாகா துல்லா என்பவர் அடிக்கடி செல்ஃபோன் மூலம் பேசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மதுரை வந்த புலனாய்வு அலுவலர்கள் அவரைக் கைது செய்து நள்ளிரவு முதல் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.